பாமாயில் இறக்குமதியைக் குறைக்க ஒன்றிய அரசின் புதிய திட்டம்!

public

இன்னும் ஐந்தாண்டுகளில் ரூ.11,040 கோடியில் பாமாயில் இறக்குமதியைக் குறைக்கும் புதிய திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி மூலமே நிறைவேற்றுகிறது. இதில் பாமாயில் இறக்குமதி மட்டுமே 56 சதவிகிதம் ஆகும். எனவே பாமாயில் இறக்குமதியைப் படிப்படியாக குறைக்கவும், அதற்குப் பதிலாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் உள்நாட்டில் எண்ணெய் பனை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.11,040 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. ‘சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் – எண்ணெய் பனை’ (என்.எம்.இ.ஓ – ஓ.பி) எனப்படும் இந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளை முன்வைத்து, ரூ.11,040 கோடியில் சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் – எண்ணெய் பனை திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது’ என்றார். இதில் ரூ.8,844 கோடி மத்திய அரசின் பங்காகவும், ரூ.2,196 கோடி மாநில அரசுகளின் பங்காகவும் இருக்கும்” என கூறிய அனுராக் தாகூர், “இந்தப் புதிய திட்டம் தற்போதைய உணவு பாதுகாப்பு திட்டத்தையும் உள்ளடக்கும்” எனவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து விரிவாகப் பேசியுள்ள வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் – எண்ணெய் பனை எனப்படும் இந்தப் புதிய திட்டத்தின் மூலம் 2025-26ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய் பனை விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த சாகுபடி பரப்பு 10 லட்சம் ஹெக்டேராக உயரும். இதன் மூலம் கச்சா பாமாயில் உற்பத்தி 2025-26ஆம் ஆண்டுக்குள் 11.20 லட்சம் டன்னாகவும், 2029-30-க்குள் 28 லட்சம் டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் எண்ணெய் பனை சாகுபடியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்த திட்டம் நிவர்த்தி செய்யும்.

எண்ணெய் பனை சாகுபடியில் பலனும், லாபமும் கிடைக்க ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகும். எனவே அவ்வளவு நாட்கள் காத்திருக்க சிறு விவசாயிகளால் முடியாது. வெற்றிகரமாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குகூட, விலை ஏற்ற இறக்கம் காரணமாக தகுந்த பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே இதைக் கருத்தில்கொண்டு, எண்ணெய் பனை சாகுபடியை மேலும் அதிகரிப்பதற்காக இந்தத் திட்டத்தின் கீழ் உதவி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது” என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *