மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

ஒரு சதவிகிதமாக குறைந்த கொரோனா பரவல்: செயலாளர்!

ஒரு சதவிகிதமாக குறைந்த கொரோனா பரவல்: செயலாளர்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 சதவிகிதமாக குறைந்துள்ளது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் இன்று(ஆகஸ்ட் 20)ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வர ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்று 6.93 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதுவரை அரசு மற்றும் தனியார் இணைந்து சுமார் 2.7 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

நல்ல செய்தி என்னவென்றால், பல நாட்களுக்கு பிறகு மாநிலத்தின் கொரோனா பரவல் ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல் தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என 17 மாவட்டங்களில் தொற்று பரவல்1 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. ஐந்து சதவிகிதத்துக்கு கீழே கொண்டுவருவதுதான் ஒன்றிய அரசின் இலக்கு. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சதவிகிதமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும்,1 சதவிகிதத்துக்கு கீழே உள்ள மாவட்டங்களில் பூஜ்ஜியத்திற்கும், 1 சதவிகிதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆலய நிகழ்ச்சி, வீட்டு நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் கொரோனா பரவுகிறது. அதனால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் ” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அது மிகப்பெரிய பாதிப்பை கொண்டுவராது. தடுப்பூசி இருப்பு அதிகமாக உள்ளது; மக்கள்வரத்துதான் குறைவாக உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

இரண்டாம் தவணை தடுப்பூசியை 10 லட்சம் பேர் கோவிஷூல்டு மற்றும் 3.5 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் போலி தடுப்பூசி இல்லை. அரசு அங்கீகாரம் வழங்கியவை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. கோவின் செயலியில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளது. அவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், காய்ச்சல் இருந்தால் மருத்துவமனை செல்லுதல் போன்றவற்றை சரியாக பின்பற்றினாலே தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்” என்று கூறினார்.

பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய பொது சுகாதார இயக்குனர் செல்வ விநாயகம், ”பள்ளிகளில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருக்கவேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும் ஆகியவை அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 20 ஆக 2021