மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்!

நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்!

நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் கோயில்களில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை எதிர்த்தும், தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுபோன்று, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகம விதிமுறைகளை மீறி அர்ச்சகரை நியமிக்கும் 38 கோயில்களின் அறிவிப்பாணைகளை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமாரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நேற்று (ஆகஸ்ட் 18) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜி.ஜெயப்பிரியாவின் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றியே பணி நியமனம் நடந்துள்ளது.

அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருடப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்தத் தகுதியின் அடிப்படையில் விளம்பரத்தின் மூலம் மனுதாரர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அவர்களும் விண்ணப்பிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை .

தமிழ்நாடு அரசு பல்வேறு கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் பல்வேறு பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி பெற்றவர்களைக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். மனுதாரர் குறிப்பிட்ட 37 கோயில்களில் 19 கோயில்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்காததால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை பணியாளர் விதிப்படி, பல்வேறு கோயில்களில் தகுதி வாய்ந்த 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில கோயில்களில் அர்ச்சகர்கள் ஓய்வுபெற்ற நிலையிலும் நிரப்பப்படாமல் உள்ளதால், ஓய்வு பெற்றவர்களையே தொடர்ந்து பணி செய்து வருகின்றனர்.

விதிகளை மீறி பணி நியமனம் நடந்திருக்கிறது என்று கருதும் விண்ணப்பதாரர்கள், நீதிமன்றத்தை நாடாமலேயே இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் அணுகி நியமனம் தொடர்பாக முறையிடுவதற்கு விதி உள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்து சமய அறநிலைத் துறை சட்டத்தை பின்பற்றியே அர்ச்சகர் நியமனங்கள் இருப்பதால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 19 ஆக 2021