மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

மீம்ஸ், ட்ரோல் வலியை தருகிறது : புதிய அர்ச்சகர்கள்!

மீம்ஸ், ட்ரோல் வலியை தருகிறது : புதிய அர்ச்சகர்கள்!

கோயில்களில் கடவுளுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தாலும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் மீம்ஸ்,ட்ரோல் மற்றும் தவறான தகவல்கள் அதிக வலியை ஏற்படுத்துகின்றன என்று புதிய அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிராமணர் அல்லாதவர்கள் உள்பட 58 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் பத்து பேர் திருச்சி பகுதிகளில் உள்ள கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது அரசியல் வட்டாரங்களில் விவாதங்களுக்கு வழிவகுத்திருந்தாலும், ஒரு நீண்ட சட்டப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், இதற்காக காத்து கொண்டிருந்தவர்களுக்கு மன நிறைவை அளித்துள்ளது.

புதிதாக அர்ச்சகராக நியமிக்கப்பட்ட நான்கு பேர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதில் மகேஷ்குமார்(31) என்பவர் கூறுகையில்,”நான், சமயபுரத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு சமூகப் புரட்சியின் தொடக்கமாகவே கருதுகிறேன். நான் சிறுவனாக இருந்தபோதே என் வீட்டில் சிறிய சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தேன். தேவையான அனைத்து பயிற்சிகளையும் பெற்று அனைத்து நேர்காணல்களையும் முடித்த பிறகு, குறிப்பிடத்தக்க கோயில் ஒன்றில் பணி கிடைத்ததை சிறப்பாக உணர்கிறேன். பல ஆண்டுகளாக என்னை கேலி செய்த பலர் இப்போது வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள்” என்று கூறினார்.

வயலூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள பிரபு, " நான் 17 வயதில் அர்ச்சக பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். நாங்கள் பயிற்சி முடித்த காலத்தில் பணி கிடைப்பதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில், தமிழ்நாட்டிலும், சிங்கப்பூரிலும் உள்ள தனியார் கோயில்களில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்தேன். அதுமட்டுமில்லாமல், திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று சடங்குகளை செய்து வந்தேன். எனது குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இருந்தாலும். வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் பணியாற்ற விரும்பினேன்.அதுதான் திருப்தியை கொடுக்கும். அதுதற்போது நடந்துள்ளது” என்று கூறினார்.

”இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் எனக்கே சுதந்திரம் கிடைத்ததுபோல் உணர்ந்தேன்” என்று நாகநாதசுவாமி கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள வேல்முருகன் கூறினார்.

வயலூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றும் எஸ்.ஜெயபாலன் கூறுகையில் (31), "என் தந்தை, தாத்தா மற்றும் என் உறவினர்கள் என அனைவரும் தலைமுறை தலைமுறையாக கோயில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சிறு வயதிலிருந்தே பிரார்த்தனை மற்றும் ஸ்லோகங்களை நன்கு அறிந்த நான் அர்ச்சகப் பயிற்சியில் சேர முடிவு செய்தேன். அர்ச்சகர் பயிற்சி பெற்று தற்போது அர்ச்சகர் ஆகவும் பணி கிடைத்து விட்டது. இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று கூறியவர்,

ஆன்மீகப் பணிகளை செய்து கடவுளுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறோம். ஆனால், எங்களை பற்றி சமூகவலைதளங்களில் பரப்பப்படும் மீம்ஸ்கள், ட்ரோல்கள், மற்றும் தவறான தகவல்கள் மிகுந்த வலியையும், வேதனையையும் தருகிறது. ஏன் இந்த மாதிரியான ட்ரோல்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று வேதனையுடன் கூறினார்.

-வினிதா

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

வியாழன் 19 ஆக 2021