மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

மைசூரில் உள்ள கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு!

மைசூரில் உள்ள கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு!

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் சென்னைக்கு இடமாற்றம் செய்யவும், தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, ’தமிழ் கல்வெட்டியல் கிளை’ எனப் பெயர் மாற்றம் செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்தார். அதில், "வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் கல்வெட்டுக்கள், பனை ஓலைக் குறிப்புகள், அகழாய்வுப் பொருள்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன

வரலாற்றுக்கு ஆதாரமாக பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுகளில் இருந்து கிடைக்கப் பெற்றதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு 1961ஆம் ஆண்டு கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தியது.இதன் முக்கியப் பணி தமிழ்நாட்டின் பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது, அகழாய்வு செய்து பழம்பெருமைக்கு ஆதாரமாகத் திகழும் பொருள்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது, பழமைக்கு ஆதாரமான கலை, சிற்பம் போன்றவற்றை பாதுகாப்பது, அவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பதிப்பித்து வெளியிடுவது ஆகியவையே.

பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டு, கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. ஆனால் அவை இன்று வரை பதிப்பித்து வெளியிடப்படவில்லை. ஆகவே மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுக்களை, தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்புச் சட்டப்படி, பாதுகாக்கவும், நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) நீதிபதிகள், கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் தீர்ப்பை வெளியிட்டனர்.

”சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, ’தமிழ் கல்வெட்டியல் கிளை’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

தொல்லியல்துறை தமிழ் தொடர்பான அனைத்து வரலாற்று ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு ஆறு மாதத்திற்குள் மாற்ற வேண்டும். தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு ஆறு மாதங்களுக்குள் செய்து தர வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வியாழன் 19 ஆக 2021