மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிகள் திறக்கப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வீட்டிற்குள்ளேயே மாணவர்கள் முடங்கியிருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர், அதனால் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

தற்போது தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை பல்வேறு தரப்பினர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 20ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால், பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் இன்று(ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ளார்.

அதில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது, 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் செயல்பட வேண்டும்.

பள்ளி நிர்வாகம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.

மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் கருவி ஆகியவை பள்ளிகளில் இடம்பெற வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிறதா, என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.

நடமாடும் மருத்துவப் பரிசோதனைக் குழுவின் தொடர்பு எண்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் வெளியிட வேண்டும்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் சேர்க்கக்கூடாது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான அளவிற்கு வைட்டமின் சி, மல்டி வைட்டமின் உள்ளிட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமர வைக்க வேண்டும்.

முதல் நாளில் 50 சதவிகித மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவிகித மாணவர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும்.

பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன்கள், கழிவறைகள், நூலகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை விட்டு கிளம்புவதற்கு முன், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

பள்ளிகளில் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து பள்ளிகளில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 18 ஆக 2021