’இதற்காக 15 ஆண்டுகள் காத்திருந்தேன்’!

public

அர்ச்சகராகும் கனவுடன் 15 ஆண்டுகளாக காத்திருந்தேன் என மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் அருண்குமார் கூறியுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பிராமணர் அல்லாத ஐந்து பேர் உள்பட 58 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் பெண் ஓதுவார் ஒருவரும் அடங்குவார். இத்திட்டத்தினை பலரும் வரவேற்றாலும், ஒருசிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கோயில்களில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களை வேலையிலிருந்து தூக்கிவிட்டு, புதிய நபர்கள் நியமிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வந்தன. எந்த அர்ச்சகரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணையை பெற்ற அர்ச்சகர்கள் கோயில்களில் பணியை தொடங்கியுள்ளனர். அதன்படி பிராமணர் அல்லாத மகாராஜன், அருண்குமார் ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள துணைக் கோயில்களில் தங்கள் பணியை தொடங்கினர்.

இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கூறுகையில், மேலூர் தாலுகாவில் உள்ள அமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோயிலில் மகாராஜனும், அருள்மிகு தேரடி கருப்பசாமி கோயிலில் அருண்குமாரும் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

இதுகுறித்து அருண்குமார் ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறுகையில், ”மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கீழுள்ள கோயிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் 2007ம் ஆண்டில் அர்ச்சகப் பயிற்சியை முடித்தேன். சிறு கோயில்களில் அர்ச்சகராக பணியாற்றி வந்த நான் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் ஆகியுள்ளேன். இதற்காக நான் கடந்த 15 ஆண்டுகளாக காத்திருந்தேன். தற்போது என் கனவு நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றி “ என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *