மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி யார்?

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி யார்?

உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதில், நீதிபதி நாகரத்னா 2027ஆம் ஆண்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 9 நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்காக 9 பேர் அடங்கிய பட்டியலை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பிவி நாகரத்னா, தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பெலா திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிக்குமார், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா, திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷி மற்றும் குஜராத் மற்றும் சிக்கிம் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் ஜே கே மகேஸ்வரி உள்ளிட்டோரின் பெயர்களும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளில், நீதிபதி அபய் ஓகா மிக மூத்த உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சிவில் சுதந்திரம் குறித்த தீர்ப்புகளுக்கு பெயர் பெற்றவர். இரண்டாவது மூத்த நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சி டி ரவிக்குமாரும், மூன்றாவது மூத்த நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எம் எம் சுந்தரேஷூம் உள்ளனர்.

இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த பெண் நீதிபதியும் தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றது இல்லை. தற்போது உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ள புதிய நீதிபதிகள் பட்டியலில் இடம்பெற்ற நீதிபதி நாகரத்னா தலைமை நீதிபதியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1962ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி பிறந்த பி.வி.நாகரத்னாவின் தந்தை இஎஸ் வெங்கடராமையா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். கடந்த 1989ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாதங்கள் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

பெங்களூருவில் வழக்கறிஞராக இருந்த பி.வி.நாகரத்னா, 2008ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு, அதே நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் உள்ளதால், கொலிஜியம் பரிந்துரையின்படி சீனியார்ட்டி அடிப்படையில் 2027ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், அது இந்தியாவின் நீதித்துறை அத்தியாயத்தில் ஒரு வரலாற்று தருணமாக அமையும்.

கொலிஜியத்தின் இந்த பரிந்துரைகள், ஏற்றுக்கொள்ளப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயரும்.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

புதன் 18 ஆக 2021