மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

பெண் பயணியை மிரட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்!

பெண் பயணியை மிரட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்!

தென்காசி அருகே பெண் பயணியைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, செருப்பால் அடிக்க முயன்ற காரணத்துக்காக அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் அதிகமான பெண்கள் பேருந்துகளில் பயணிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், சில இடங்களில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் நடத்துநர், ஓட்டுநர்கள் தரக்குறைவாக நடந்து கொள்வதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களைத் தவிர்க்கும் வகையில் பெண் பயணிகளிடம் ஓட்டுநரும் நடத்துநரும் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளம்-கடையம் இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்தில் (27 ஏ) குத்தப்பாஞ்சான் என்ற கிராமத்தில் சேர்மக்கனி என்ற பெண் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறிய அவர் ஓட்டுநரிடம், ஓரிரு நிமிடங்கள் நிறுத்தினால் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் குழந்தையும் வந்துவிடுவார்கள் எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு பேருந்து ஓட்டுநரான பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதிமுத்து, 'நான் பேருந்தை நிறுத்திட்டு, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அழைத்துவரட்டுமா?' என்று கேட்டுள்ளார். “ஏன் இப்படி அநாகரீகமாக பேசுறீங்க” என்று சேர்மக்கனி கேட்டுள்ளார்.

கோபத்தில் டிரைவர் சீட்டை விட்டு எழுந்து வந்த ஓட்டுநர் முப்பிடாதிமுத்து, சேர்மக்கனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருகட்டத்தில் செருப்பைக் கழற்றி அடிக்க முயன்றுள்ளார். அதைப் பார்த்து கோபமடைந்த பயணிகள், ஓட்டுநரைக் கண்டித்ததையடுத்து, ஓட்டுநர் தன் இருக்கைக்கு

சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தைப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகப் பரவி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சேர்மக்கனியும், ஓட்டுநரும் கடையம் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். இருவரையும் போலீஸார் அழைத்து பேசினர். இருவரும் சமாதானமாகப் போவதாகத் தெரிவித்ததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி நிர்வாக இயக்குநர் ராஜேஸ்வரன் இந்த சம்பவத்துக்குத் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அரசு பேருந்து ஓட்டுநர் முப்பிடாதிமுத்துவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

புதன் 18 ஆக 2021