மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

பெகாசஸ் குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்படும்!

பெகாசஸ் குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்படும்!

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் எனப் பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கியது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தின.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த், அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் நேற்று (ஆகஸ்ட் 16) ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், "இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியர்கள் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அனைத்தும் பொய். ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி உபாத்யாயா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். தனிப்பட்ட நலன்களுக்காக தவறான தகவல்கள் பரப்பிவிடப்படுகின்றன. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம்.

இருப்பினும், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் என்பதால், வல்லுநர்கள் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இக்குழுவின் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

குறுகிய கால அவகாசம் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுக்களின் தொகுப்பில் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இயலவில்லை. மீண்டும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கினால், விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், "ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அரசாங்கம் அல்லது அதன் ஏஜென்ஸி உளவு மென்பொருளைப் பயன்படுத்தியதா என்பது குறித்து தெரிவிக்கவில்லை. மேலும், அரசு தலைமையில் ஆய்வு குழு அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று கூறினார்.

இதையடுத்து, பத்து நாட்களில் பெகசாஸ் விவகாரம் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 17 ஆக 2021