மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

ஆகம விதிகளை பின்பற்றாமல் அர்ச்சகர்கள் நியமனமா?

ஆகம விதிகளை பின்பற்றாமல் அர்ச்சகர்கள் நியமனமா?

ஆகம விதிப்படி முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயிலில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், குறிப்பாக இந்து அறநிலையத் துறையில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோயில் நிலங்கள் மீட்பு, தமிழில் அர்ச்சனை உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. மேலும், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, திமுக ஆட்சிக்கு வந்து 100வது நாளான நேற்று முன் தினம்(ஆகஸ்ட் 14) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தினை செயல்படுத்தி முதற்கட்டமாக 5 தலித்துக்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். இதில் ஒருவர் பெண் ஓதுவார்.

இந்த திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்து வரவேற்பு அளித்தாலும், சிவாச்சாரியார்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஆகம விதிகளைப் பின்பற்றி பயிற்சி பெறாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 16) தனி நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு முரணாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முறையாக பயிற்சி பெற்றவர்கள்தான் கோயிலில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

மேலும், இதே கோரிக்கையுடன் கூடிய மற்றொரு வழக்கு தலைமை நீதிபதியின் அமர்வில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குடன் சேர்ந்து இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கின் விவரம்

இதுதொடர்பாக சி.ஐ.டி நகரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. இது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

தமிழில் அர்ச்சனை செய்வதும், குறிப்பிட்ட பிரிவினரை தவிர பிறர் கருவறைக்குள் செல்வதும் ஆகம விதிகளுக்கு முரணானது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44 ஆயிரம் கோயில்களில், 500 கோயில்கள் மட்டுமே ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன. பிற கோயில்களிலும் ஆகம விதிகள் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும், இந்த 500 கோயில்கள் தவிர 43,500 கோயில்களில் தமிழ்நாடு அரசின் திட்டப்படி அனைவரையும் அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த 500 கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது. ஆகம விதிகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

திங்கள் 16 ஆக 2021