மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

public

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், அனைத்து வகையான கல்லூரிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வியாண்டுக்கான கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, செப்டம்பர் 1முதல் பள்ளிகள் திறக்கப்படும். ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது.

அதன்படி, பல மாதங்களுக்கு பிறகு இன்று(ஆகஸ்ட் 16) 25 அரசு மற்றும் 15 பல் மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் என 60 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றவேண்டும். வகுப்பறை மற்றும் கல்லூரி வளாகத்தில் குழுவாக இருக்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மாணவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வரும்வரை சில மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் ஆய்வு நடத்திய ஒன்றிய குழுவினர் திருப்தி அடைந்துள்ளனர். நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 2 வாரங்களாக 2000 என்ற அளவிலேயே தினசரி கொரோனா பாதிப்பு இருக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா பரவல் சற்று குறைகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மதம் சார்ந்த மற்றும் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகமாகக் கூடுவதால் தொற்று அதிகமாகிறது. கோவை, ஈரோடு ,திருப்பூர், தஞ்சை,திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று கொஞ்சம் சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1.2 சதவிகிதமாக இருக்கிறது. கோவையில் 2%, தஞ்சையில் 2%, அரியலூரில் 1.9% என 18 மாவட்டங்களில் மாநில சராசரியை விட தொற்று விகிதம் அதிகமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவில் மீண்டும் டெல்டா பிளஸ் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.அதுபோன்று கேரளாவில் தொற்று அதிகமாவதால், எல்லையோர மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1.97கோடி பேர் முதல் டோஸையும், 47 லட்சம் பேர் இரண்டாவது டோஸை போட்டுள்ளனர். டெங்கு தடுப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

**-வினிதா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *