பொதுவெளியில் நிகழ்ச்சிகளை நடத்தினால் சட்ட நடவடிக்கை!

public

சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகபட்சமாக சென்னையில் 243 பேரும், கோவையில் 229 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 மாவட்டங்களில் கொரோனா தொற்று 100க்கு கீழ் இருந்தாலும், நான்கு மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், அந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, 2,812 மண்டபங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விதிமீறிய, 60 மண்டப உரிமையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம், 2.29 லட்சம் ரூபாய் அபராதமும், கொரோனா விதிமீறல்களை பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து, மே மாதம் முதல் இதுவரை, 3.70 கோடி ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பொது இடங்களில், தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 188இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *