ஆவின்: அட்டைதாரர்களிடம் தனிநபர் விவரங்கள் கோரப்படுவது ஏன்?

public

பால் அட்டைதாரர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘பால் அட்டைதாரர்களிடம் தனிநபர் விவரங்கள் கோரப்படுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் அதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பால் அட்டைதாரர்களின் விவரங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பால் அட்டைதாரர்கள் ஆவின் நிறுவனம் நுகர்வோர் சேவையில் எந்தவித குறைபாடுகளும் இன்றி அனைவரும் பயன்பெறும் வகையில் சேவையாற்றி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 16-5-2021 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நுகர்வோர்கள் இந்த பால் அட்டை திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர்.

மாதாந்திர பால் அட்டை பால் வாங்கும் நுகர்வோர்கள், தங்களுடைய பணியிட மாற்றம் மற்றும் இதர காரணங்களால் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்று விடுகின்றனர். ஆனால், அவர்களுடைய பெயரிலேயே சில பால் விநியோகம் செய்யும் நபர்கள் தொடர்ந்து மாதாந்திர பால் அட்டைகளைப் புதுப்பித்து வருகின்றனர். அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பால் ரொக்க விற்பனைக்கு அதாவது ரூ.2 முதல் ரூ.3 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் முதல் மேற்கண்ட நுகர்வோர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது 80,000 பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 40,000 லிட்டர் பால் விற்பனையில் மாதம் ரூ.36 லட்சம் நஷ்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விவரம், மாத வருமானம், ஆதார் விவரம் எதுவும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் நுகர்வோர்களின் வசதிக்காக பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள் புதிய விண்ணப்பத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பால் அட்டையைப் புதுப்பிக்கலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஆவின் பால் அட்டைதாரர்களிடம் தனிநபர் விவரம் கோரப்படுவது ஏன்?’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தது. அதன்படி, தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பால் அட்டை மூலம் பால் வாங்குவோரிடம் இருந்து அட்டைதாரர் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு காலமாக ஆவின் பால் வாங்கப்படுகிறது, ஆதார் அட்டை எண் அல்லது குடும்ப அட்டை எண் அல்லது வருமான வரி நிரந்தர கணக்கு எண் அல்லது ஓட்டுநர் உரிமம் எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றில் ஒன்று போன்ற விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஆவின் நிர்வாகம் கோரி உள்ளதாகவும், இந்த தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டால்தான் பால் அட்டை வழங்கப்படும் என்றும், இதன் காரணமாக எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆவின் அட்டைதாரர்கள் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆவின் நிர்வாகம் என்ன காரணத்துக்காக, எதன் அடிப்படையில் இது போன்ற விவரங்களை பால் அட்டைதாரர்களிடம் இருந்து பெறுகிறது என்பதை தெளிவுப்படுத்தாமல், திடீரென்று இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஏனென்றால், தனிநபர் விவரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக பால் அட்டைதாரர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதையடுத்து, அந்த இழப்பை ஓரளவு ஈடு செய்ய பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஆவின் நிர்வாகம் இதுபோன்ற மறைமுகமான நடவடிக்கைகளை எடுக்கிறதோ என்ற எண்ணம் பால் அட்டைதாரர்களின் மத்தியில் நிலவுகிறது. இது உண்மையாக இருப்பின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

எனவே, முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்களிடம் இருந்து கோருகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *