மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

தொற்று அதிகரிப்புக்கு அலட்சியமே காரணம் : செயலாளர்!

தொற்று அதிகரிப்புக்கு அலட்சியமே காரணம் : செயலாளர்!

மக்களின் அலட்சியத்தால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,79,130 ஆக உள்ளது. இதுவரை 25,24,400 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(ஆகஸ்ட் 11) ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வந்தாலும், தினசரி பாதிப்பு இன்னும் 2000 என்ற அளவில் பதிவாகி கொண்டு வருகிறது. இது சற்று கவலை அளிக்கிறது. இருப்பினும் 34 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கு கீழ் உள்ளது. அதேசமயம் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100க்கு மேல் பதிவாகி கொண்டிருக்கிறது. என்ன நிலைமை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கேரளாவில் 51 சதவிகிதமும், மகாராஷ்டிராவில் 19 சதவிகிதமும் பாதிப்பு உள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டில் 4லிருந்து 5 சதவிகிதமாக பதிவாகிறது. இது சிறியது என்று புறம்தள்ளிவிட முடியாது. பூஜ்ஜியம் என்ற இலக்கை எட்ட வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொற்று அதிகரித்து வருகிறது. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விதிமுறைகளை மீறியும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கோயில் ஒன்றில் ஆடி மாத கூழ் ஊத்தும் விழாவில் கலந்து கொண்ட 300 பேரில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில் ஒரு பெண்மணி இறந்துவிட்டார். தயவு செய்து மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மதம், கலாச்சாரம், பிறந்தநாள், திருமணம், இறப்பு உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் மக்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா எதிலும் பாரபட்சம் பார்ப்பதில்லை. இனியும் மக்கள் அலட்சியமாக இருந்தால், கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு ஏற்படும். அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ கொரோனா குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் 38 சதவிகிதத்தினர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளில் அதிக அளவில் முகக்கவசம் அணியும் பழக்கம் உள்ளது. அனைத்து மத ஆலயங்களிலும் சமூக இடைவெளி என்பதே இல்லை. சாலையோர கடைகளில் 5-23 சதவிகிதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். வணிக வளாகங்களில் ஒரளவு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் அனைத்து இடங்களிலும் இல்லை.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று வீதி வீதியாக கூவி கூவி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆனால் இன்னும் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை. சிறிது நாட்களுக்கு முன்பு மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி பற்றாக்குறை என்பது அனைத்து நாளிலும் இல்லை. அதனால், அதை காரணமாக காட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று சொல்லக் கூடாது. மேலே சொன்ன 24 பேருமே தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா மூன்றாவது அலையை தடுக்கவும், இரண்டாவது அலையை பூஜ்ஜியமாக குறைக்கவும் மக்கள் ஒத்துழைப்பு அவசியம். அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 11 ஆக 2021