மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

தமிழகத்தில் 67 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு!

தமிழகத்தில் 67 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு!

தமிழகத்தில் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி பி.ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் எரிபொருளுக்கு மாற்றாகவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு நிறைந்த எரிபொருளான இயற்கை எரிவாயு (எல்என்ஜி) பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் முதல் இயற்கை எரிவாயு முனையம் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவன கூட்டுத் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த முனையத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் பி.ஜெயதேவன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “உலக அளவில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது. இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது. இந்த நிலையில் ரூ.5,000 கோடி செலவில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை அமெரிக்கா, கத்தார், மலேசியா, அரபு நாடுகள், நைஜீரியா, ஓமன் ஆகியவை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 25 சரக்கு கப்பல்கள் மூலம் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த முனையத்தின் பயன்பாடு 50 சதவிகிதமாக உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் இது முழுமையான பயன்பாட்டை எட்டும். அப்போது, 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படும். அதற்கு அதிகமாக தேவை அதிகரிக்கும்போது, அடுத்த 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு கையாளுவதற்கான திட்டமும் தயார்நிலையில் இருக்கிறது.

தமிழகத்தில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி, ராமநாதபுரம் வரை சுமார் 1,500 கி.மீ தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் 17 மாவட்டங்கள் பயன் அடையும். இந்த மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்ய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும்.

அதைத் தொடர்ந்து, இந்தக் கட்டமைப்பை பயன்படுத்தி, 2030ஆம் ஆண்டுக்குள் 17 மாவட்டங்களில் சுமார் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக 22 மாவட்டங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று கூறியவர்,

மேலும் “சென்னையில் தற்போது 25 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 8 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1,131 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இயற்கை எரிவாயு பயன்பாடானது பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடும்போது 50 சதவிகிதம் லாபகரமானது. சமையல் எரிவாயுவை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் லாபகரமானது. மேலும் மற்ற எரிபொருட்களைவிட இது மிகவும் பாதுகாப்பானது.

இயற்கை எரிவாயுவின் பயன்பாடு அதிகரிக்கும்போது தமிழகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் கூடும். தமிழகத்தில் எந்தத் திட்டம் தொடங்குவதற்கும் தமிழக அரசு மிகுந்த ஒத்துழைப்பு வழங்குகிறது” என்று அவர் கூறினார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 9 ஆக 2021