மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் கண்காணிப்பு தீவிரம்!

ஆடி அமாவாசை: நீர் நிலைகளில்  கண்காணிப்பு தீவிரம்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில், இறந்த முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து அவர்களது உறவினர்கள் புனித நீராடுவர்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக நீர் நிலைகளுக்கு சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், மேட்டூர் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ராமேஸ்வரம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் கடந்த 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. வரும் 12ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கும் அறை வழங்கக்கூடாது என்று அப்பகுதியிலுள்ள உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் வெறிச்சோடி காணப்படுகிறது. வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்திற்குத் தடையை மீறி வருபவர்களைத் தடுத்து நிறுத்தவும் கண்காணிக்கவும் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தடை குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமாவது ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித தீர்த்தங்களில் நீராடித் திதி தர்ப்பணம் கொடுக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அதே சமயத்தில், தடையை மீறி சில உள்ளூர் மக்கள் புரோகிதர்கள் இன்றி, கடலில் குளித்துச் செல்கின்றனர்.

தூத்துக்குடி

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் செல்லும் கடற்கரைச் சாலை மற்றும் புதிய கடற்கரை , தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் சிலர் வீடுகளில் தர்ப்பணம் செய்து கோயில் முன்பு நின்று கோபுர தரிசனம் செய்து செல்கின்றனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் அமைந்துள்ள அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் இங்குக் குவிவார்கள். ஆனால் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அம்மா மண்டபம் பகுதியில் குவிக்கப்பட்டு தர்ப்பணம் கொடுக்க வருபவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மதுரை

மதுரை வைகையாற்றில் ஏராளமானோர் இன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க குவிந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர். தடையை மீறி கரையோரப் பகுதிகளுக்கு வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசார் கரையோரப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர்

மேட்டூர் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில், மக்கள் குவிவதைத் தடுக்கும் வகையில், போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வருபவர்களைத் தடுக்க காவிரி பாலம் மற்றும் முனியப்பன் கோயில் பகுதி அனல்மின்நிலைய பாலம் ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து அங்கு அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

-பிரியா

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

ஞாயிறு 8 ஆக 2021