மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

தமிழக வாகனங்களின் எண்ணிக்கை: மூன்று கோடியைத் தாண்டியது!

தமிழக வாகனங்களின் எண்ணிக்கை: மூன்று கோடியைத் தாண்டியது!

தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டியுள்ளது. இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 31,565 என்று அரசு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 14 சதவிகிதம்வரை வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தாக்கத்தின்போது வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, தற்போது அரசுப் போக்குவரத்துத் துறை பதிவேடுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடியே 3 லட்சத்து 31,969 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 31,565. மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் இது சுமார் 85 சதவிகிதமாகும்.

தமிழகத்தில் 2011-ல் ஒரு கோடியே 12 லட்சத்து 7,338 இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கொரோனா பாதிப்பு காலத்தில் ரயில், பேருந்துகளில் மக்கள் பயணிப்பதை தவிர்த்தாலும், கார், இருசக்கர வாகனங்கள் போன்ற சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகள், “தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சத்தால் மக்கள் பொதுப் போக்குவரத்து வசதியை தவிர்த்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை 3 முதல் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, சாலைகளை விரிவுபடுத்துதல், முக்கியமான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, மத்திய அரசு பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 20 ஆண்டுகளைக் கடந்த சொந்த வாகனங்களையும், 15 ஆண்டுகளைக் கடந்த போக்குவரத்து வாகனங்களையும் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது பழைய வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம்தான், மாசு குறைபாட்டை சரிசெய்ய முடியும். உதிரி பாகங்களின் விலை குறையும். புதிய வாகனங்களின் உற்பத்தி பெருகும்” என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஐஐடி பேராசிரியர், “புதிய தொழிற்சாலைகள் திறப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவைகளால் வாகனப் பெருக்கம் தவிர்க்க முடியாதது. ஆனாலும், சில கட்டுபாடுகள் மூலம் தனியார் வாகனப் பெருக்கத்தை குறைக்கலாம்.

வெளிநாடுகளைப்போல, மக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல பல்வேறு வகையான பொதுப் போக்குவரத்து வசதியை உருவாக்க வேண்டும். அதேபோல, விரைவாக செல்ல தனி பாதை ஒதுக்கீடு, பேருந்துகளுக்குத் தனிசாலை போன்றவற்றை செயல்படுத்தலாம். மேலும், டெல்லியில் கார் போன்ற சொந்த வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப்போல, சென்னை போன்ற மாநகரங்களிலும் கட்டுப்பாடுகளை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்” என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 3 ஆக 2021