மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டம் ரத்து!

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டம் ரத்து!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்துப் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பலர் தங்களது பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார்.

இந்த தடையை மீறி விளையாடுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகளைத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.

"கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக சில மரணங்கள் நிகழ்ந்தால் இந்த விளையாட்டிற்குத் தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியானதாக உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தும் மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும்" மனுதாரர்கள் நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும் இந்த தடை சட்டத்தை இயற்ற முறையாக எந்த ஒரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது திறமைகளுக்கான விளையாட்டு சூதாட்ட விளையாட்டு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் நிறையப் பேர் ஏமாந்து போயுள்ளதாகவும் பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும், சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இவ்வழக்கில் இன்று (ஆகஸ்ட் 3) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும் போதுமான காரணங்களை விளக்காமல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், இதனை ரத்து செய்தனர்.

மேலும் உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை என்று கூறி தீர்ப்பு வழங்கினர்.

-பிரியா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 3 ஆக 2021