மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதிக்கரையை ஒட்டி 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கரையோரம் இருப்பதால் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் அபாயகரமான சூழலை தடுக்கும் வகையில் இந்த குடிசைப் பகுதியில் வாழும் மக்களை குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியமர்த்தும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பூர்வக்குடி மக்களை அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருவதாக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி நேற்று (ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர் வழி கால்வாய்களின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி, மறுசீரமைப்பு செய்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கடளை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு கூவம் நதியோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசித்து வரும் குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றன.

நீர்நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் எனக் கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 93 ஆக்கிரமிப்பு குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக மறுகுடியமர்த்தப்படுவார்கள். மேலும் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருக்கும் எஞ்சிய மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 2 ஆக 2021