மத்திய அரசு விருது வென்ற வேலூர் ஆரம்ப சுகாதார நிலையம்!

public

சுற்றுப்புறத் தூய்மை, பராமரிப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்காக வேலூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேசிய அளவிலான ‘காயகல்ப்’ விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பாக, சுகாதாரத்தில் மிக உயர்ந்த தரத்துடன் இயங்கும் மருத்துவமனைகளுக்கு ஆண்டுதோறும் ‘காயகல்ப்’ விருது வழங்கப்படுகிறது. சிறந்த சுகாதார வசதி, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இந்த விருது பெறத் தகுதியானவை. விருதுடன்கூடிய பரிசுத் தொகையையும் மத்திய அரசு வழங்கி ஊக்கப்படுத்துகிறது.

இந்த விருதினைப் பெற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் தங்களின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்டு ஆண்டுதோறும் விண்ணப்பிப்பது உண்டு. தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத் திட்டத்தின் தரவரிசை கமிட்டி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் சில மருத்துவமனைகளைத் தேர்வு செய்கிறது.

அப்படி தேர்வு செய்யப்படும் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளுக்குத் தரவரிசை கமிட்டி நேரில் சென்று ஆய்வு செய்து மதிப்பெண் அடிப்படையில், மருத்துவமனைகளை விருதுக்குப் பரிந்துரை செய்கிறது. அதன்படி, தமிழக அளவில் இந்த ஆண்டுக்கான காயகல்ப் விருதுக்கு, வேலூரிலுள்ள கஸ்பா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு விருதுடன்கூடிய 2 லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தரவரிசை கமிட்டி வழக்கமான முறைப்படி, கஸ்பா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து நூற்றுக்கு 90.68 சதவிகித மதிப்பெண்ணை வழங்கி கௌரப்படுத்தியிருக்கிறது. கஸ்பா சுகாதார நிலையத்தில் ஆறு படுக்கை வசதிகள் உள்ளன. ஒரு மருத்துவர் தலைமையில் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் என 15 பேர் பணியாற்றி வருகிறார்கள். இங்கு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனி பிரசவ வார்டு, தாய்-சேய் பாதுகாப்பு அறை, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை என அனைத்து வசதிகளுடனும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள கஸ்பா சுகாதார நிலைய பெண் மருத்துவர் சூர்யா சரவணன், “இந்த விருது பெற முக்கிய காரணம், முழு ஆதரவை அளித்துவரும் ரோட்டரி சங்கம். செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் என அனைவருமே இந்த விருதுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். காயகல்ப் விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது” என்றார்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பராமரித்துவரும் ரோட்டரி சங்க நிர்வாகி திருமாறன், “சுகாதார நிலையத்தை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ரோட்டரி சங்கம் பராமரித்துவருகிறது. பொதுமக்களின் நலனுக்காக மருத்துவர்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் ரோட்டரி தற்போதுவரை செய்கிறது. முக்கியமாக மருத்துவமனையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள தனியாக ஊழியர் ஒருவரை நியமித்து, அவருக்கான ஊதியத்தையும் ரோட்டரி சங்கமே வழங்கிவருகிறது. அதுமட்டுமன்றி, கடந்த 14 ஆண்டுகளாக பராமரிப்புச் செலவுகளையும் ரோட்டரி சங்கமே ஏற்றுவருகிறது. இங்கு, புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனையின் மாடியில் இருந்தது. பிரசவத்திற்காக வருபவர்கள் மாடியேறி செல்வதில் சிரமமடைந்ததால், தரைத்தளம் அருகிலேயே புதியதாக புறநோயாளிகள் பிரிவுக்கான கட்டத்தையும் ரோட்டரி சங்கம் கட்டிக்கொடுத்துள்ளது. சேவைசெய்யும் நோக்கத்தில் இந்த மருத்துவமனையை ரோட்டரி பராமரித்து வரும் நிலையில் மத்திய அரசின் காயகல்ப் விருது கிடைத்திருப்பது, எங்களுக்கு மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *