மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

ராஜேஸ் தாஸ் மீதான வழக்கை டிசம்பர் 20க்குள் முடிக்க உத்தரவு!

ராஜேஸ் தாஸ் மீதான வழக்கை டிசம்பர் 20க்குள் முடிக்க உத்தரவு!

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை டிசம்பர் 20ஆம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பி அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், எஸ்பி கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்து வருகின்றார்.

முன்னாள் சிறப்பு டிஜிபி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி ராஜேஸ்தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று(ஆகஸ்ட் 2)சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ”உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு தொடர்பாக 122 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு 72 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ”சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, எஸ்பி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு டிஜிபி, உள்துறை கூடுதல் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதியளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து, டிசம்பர் 20ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். இதில் மேற்கொண்டு கால அவகாசம் தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையை முடித்தது தொடர்பாக, டிசம்பர் 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 2 ஆக 2021