மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

தனியார் பள்ளிகள் 85 சதவிகித கட்டணத்தை வசூலிக்க அனுமதி!

தனியார் பள்ளிகள் 85 சதவிகித கட்டணத்தை வசூலிக்க அனுமதி!

நடப்பு கல்வியாண்டில் 6 தவணைகளாக 85 சதவிகித கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தனியார் பள்ளிகள் இரண்டு தவணைகளாக 75% கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள்.கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 2021-22ஆம் கல்வியாண்டிலும், 2019-20ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில பள்ளிகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளைதான்அரசு பரிசீலிக்கும். கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இவ்வழக்கு இன்று(ஜூலை 30) நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீதம் கட்டணத்தை வசூலிக்கலாம். வருமானம் பாதிக்கப்படாத துறையில் பணியாற்றும் பெற்றோர்களிடமிருந்து 85 சதவிகித கட்டணத்தையும், வருமானம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடமிருந்து 75 சதவிகிதம் கட்டணத்தையும் தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம். இந்த தொகையை 6 தவணைகளாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.

தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஆர்டிஇ சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை ஒதுக்க அரசு பரிசீலிக்கலாம். கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று மாணவர்களை ஆன்லைன் வகுப்பு அல்லது நேரடி வகுப்பிலிருந்து நீக்கக் கூடாது.

மேலும், கொரோனா தாக்கத்தால் வேலையிழப்பு, தொழில் முடக்கம் போன்ற காரணத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர், கட்டணத்தில் சலுகை அளிக்கக் கோரி அந்தந்த பள்ளிகளை நாடலாம். அதுகுறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம்.

கட்டண சலுகையில் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் பிரச்சினை வந்தால், அதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அளிக்க வேண்டும். அந்த அதிகாரி 30 நாட்களில் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுடைய கட்டண விவரங்களை இணையதளத்தில் நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும்.

கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை 8 வாரங்களில் நிரப்ப வேண்டும். மேலும், 85 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதித்து திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை இரண்டு வாரத்திற்குள் தமிழ்நாடு வெளியிட வேண்டும் என்றுக் கூறி வழக்கை முடித்து வைத்தார் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 30 ஜூலை 2021