மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

சென்னையில் காற்று மாசு: அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு உயர்வு!

சென்னையில் காற்று மாசு: அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு உயர்வு!

இந்திய அளவில் நான்கு முக்கிய மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றாக விளங்கி வரும் சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் அதிகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளைக் கொண்டிருந்த நிலையில், ‘ஆரோக்கிய திறனுக்கான முன் முயற்சி’ என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல்மின் நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட 20 இடங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்று தர பரிசோதனையை நடத்தியது.

ஒரு கன மீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (பிஎம் 2.5) 60 மைக்ரோ கிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட நான்கு மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் அதிக அளவாக திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 176 மைக்ரோ கிராம் முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு இருந்தது.

இதேபோன்று திருவொற்றியூர், காசிமேடு (துறைமுகம் அருகே), துரைப்பாக்கம் (குப்பை கொட்டும் வளாகம் அருகில்), குருவிமேடு (அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் குளம் அருகே), சோழிங்கநல்லூர் (பழைய மகாபலிபுரம் நெடுஞ்சாலை அருகில்), வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர் (குப்பை கொட்டும் வளாகம்அருகில்), மீஞ்சூர், உர்ணாம்பேடு, செப்பாக்கம் (நிலக்கரி சாம்பல் குளம் அருகே) ஶ்ரீபெரும்புதூர், தியாகராயநகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது, இது அமெரிக்க காற்று தர நிர்ணய விதிகளின்படி ஆரோக்கியமற்ற நிலையாகும். இந்தப் பகுதியில் வாழும், இதய அல்லது நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், சிறார்கள் உடல் ரீதியான செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ள கூடாது என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி காற்று தர கண்காணிப்பில் ஈடுபட்ட ஆய்வாளர் விஸ்வஜா சம்பத், “நிலக்கரியை எரிப்பதால் பெறப்படும் மின் பயன்பாட்டை குறைப்பது, போக்குவரத்து போன்றவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுவையும், அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வலுவான உள்ளூர் காற்று தர கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு காற்று மாசுபாட்டால் 11,000 பேர் உயிரிழந்துள்ளனர் என கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியா அமைப்பின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை தளர்வுகளுக்குப் பின் குறைந்த பரப்பளவு, அதிக மக்கள் நெருக்கடி நிறைந்த நகராக உள்ள சென்னை பெருநகரில் காற்றின் மாசு அதிகரித்து இருப்பது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மற்றொரு மறைமுக எச்சரிக்கை எனலாம்.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 30 ஜூலை 2021