மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

‘பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் எதுவும் உள்ளதா’ என மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘இல்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் இரண்டு அலைகளும், அதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தைப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளியிருக்கின்றன.

இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட வேண்டும் என ஏராளமான பொருளாதார நிபுணர்கள் அரசுக்குப் பரிந்துரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்படி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் எதுவும் உள்ளதா என மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் அளித்த பதிலில் ‘இல்லை’ எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றின் இணையற்ற விளைவையும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் இந்த வீழ்ச்சி பிரதிபலிக்கிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படுவதால் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதாகவும், தற்சார்பு இந்தியா திட்டத்தின் உறுதியான ஆதரவோடு 2020-21 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதை உறுதியாக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர்மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி இயக்கத்தின் விரைவான உயர்வு ஆகியவற்றின் காரணமாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் கூறினார்.

இதற்கிடையே மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், மசூர் பருப்புக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி பாதியாகக் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதைப்போல வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.

வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் மற்றும் சில வேளாண் உற்பத்தி இறக்குமதி பொருட்கள் எனச் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு இந்த நிதி ஆண்டு முதல் சிறப்பு வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 28 ஜூலை 2021