மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

யானைகளின் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தைக் கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கே கொண்டுவரவும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ளவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆசிய யானைகளின் வாழிடங்களில், மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்றாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. காலங்காலமாக யானைகள் பயன்படுத்தி வந்த வழித்தடங்களை ஆக்கிரமித்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வழியைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு யானைகள் வர நேரிடுகின்றன. இதனால் யானை-மனித எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள யானைகளின் வழித்தடங்களை மீட்கும் முயற்சியில் நீதிமன்றங்கள் அக்கறை காட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனது வழக்கமான வழித்தடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை யானைகளே தகர்த்தெறிந்து மீட்டெடுத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்தது.

நீலகிரி தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பண்ணைப் பகுதியைக் காட்டு யானைகள் அடிக்கடி கடப்பது வழக்கம். இந்த நிலையில், ஒரு குட்டி, ஒரு தாய் உள்ளிட்ட மூன்று யானைகள் இந்தப் பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் வழக்கமாகப் பயன்படுத்தும் வழித்தடத்தில் தோட்டக்கலைத்துறை உரம் பதனிடும் மையம் ஒன்றைப் புதிதாக அமைத்திருந்தது.

புதிதாக ஆக்கிரமிப்பு இருப்பதைக் கண்டு சிறிது நேரம் தயங்கி நின்ற தாய் யானை, மாற்று வழியைத் தேர்வு செய்யாமல் முன்பக்கம் அந்தக் கூடாரத்துக்குள் குட்டியுடன் நுழைந்து தகர்த்தெறிந்து பின்பக்கமாக வெளியே வந்து கடந்து சென்றது. தாய் யானையின் இந்தச் செயலைக் கண்டு தோட்டக்கலைத்துறையினர் மற்றும் வனத்துறைப் பணியாளர்கள் திகைத்து நின்றனர்.

யானைகள் வழித்தடம் குறித்து பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் மனோகரன், “குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான வனப்பகுதியில் சுமார் 15 காட்டு யானைகள் குழுக்களாகப் பிரிந்து உலா வருகின்றன. சமீபகாலமாக இந்த யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு, வேலிகள் அமைப்பது, விவசாய தோட்டங்களாக மாற்றுவது, காட்டேஜ் போன்ற கட்டுமானங்களை எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு மற்றும் தண்ணீரைத் தேடிவரும் யானைகள் தடம் மாறி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன. எனவே தோட்டக்கலைப் பண்ணைப் பகுதிகளைக் காட்டு யானைகள் சுதந்திரமாகக் கடந்து செல்லும் ஏற்பாட்டை நீலகிரி தோட்டக்கலைத்துறை செய்ய வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் கோவை மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தைக் கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கே கொண்டுவரவும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 26 ஜூலை 2021