மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

பெண் பயணிகளை ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது!

பெண் பயணிகளை ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது!

மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிப்பது தொடர்பாக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த மே 8 முதல் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வந்தாலும், ஜூலை 12ஆம் தேதி முதல்தான் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக டிக்கெட் வழங்கப்படுகிறது. பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது முதல் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இலவசமாகப் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் நடத்துநர்கள் மரியாதை இல்லாமல் தரக்குறைவாகப் பேசுவதாகவும், இலவசமாகப் பயணிப்பதால், காலியாக இருக்கும் ஆண்கள் இருக்கையில் அமர, சில நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை என்றும், டிக்கெட்டை சரியாக கைகளில் கொடுப்பதில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன.

இந்த புகார்களை தவிர்க்கும் வகையில் போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து கழகம் நேற்று (ஜூலை 24) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பேருந்து நிறுத்தத்தில் ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும்.

ஓட்டுநர், பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்துக்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.

நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.

வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவ வேண்டும்.

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது.

பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

பெண் பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.

பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்தை எவ்வித புகாரும் இன்றி செயல்படுத்த ஏதுவாக அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கும் கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் விளக்கி எடுத்துக் கூற வேண்டும். எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மகளிர் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 25 ஜூலை 2021