மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

இயந்திரத்தனமாக செயல்படக் கூடாது: மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு அறிவுரை!

இயந்திரத்தனமாக செயல்படக் கூடாது: மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு அறிவுரை!

காவல்துறைக்கு எதிரான வழக்குகளில் ஆவணங்களை ஆராய்ந்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும், இயந்திரத்தனமாக செயல்படக் கூடாது என்றும் மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர், வட்டிக்கு பணம் கொடுத்து, தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக ஆர்த்தி என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வழக்கை முடிப்பதாக இருந்தால் அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் திருவண்ணாமலை முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை நடத்திய போலீசார், வழக்கை முடித்து மனுதாரருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, தனது புகார் மீது வழக்குப் பதிவுசெய்ய கோரி ஆர்த்தி, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்ட்ரேட்டைக் கண்டித்ததுடன், திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பணி அழுத்தம் காரணமாக அவர் இப்படி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தயக்கத்தோடு ஏற்றுக் கொண்ட நீதிபதி நிர்மல் குமார் எதிர்காலத்தில் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது. காவல்துறைக்கு எதிரான வழக்குகளில் ஆவணங்களை ஆராய்ந்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி இனிவரும் நாட்களில் இயந்திரத்தனமான உத்தரவுகளை மாஜிஸ்ட்ரேட்டுகள் பிறப்பிக்க மாட்டார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

அதேசமயம், கடந்த மே 24ஆம் தேதி திருவண்ணாமலை ஆர்த்தி அளித்த புதிய புகாரை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 24 ஜூலை 2021