மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: கோவை எஸ்.பி!

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: கோவை எஸ்.பி!

கோவை மாவட்டத்தில் அதிகமாக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து நேற்று (ஜூலை 22) கோவை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடந்த குற்றங்களைக் கணக்கிட்டு, அவற்றை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளை ஆய்வு செய்து, நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். அதில், 12 முதல் 18 வயது பெண் குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தொடர்பாக 73 வழக்குகளும், முகம் தெரிந்தவர்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக 32 வழக்குகளும், பெற்றோரே குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக 50 வழக்குகளும், ஆபாச புகைப்படங்கள் தொடர்பாக 50 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட போக்சோ வழக்குகளில், இரண்டாவது பிரிவில் வரும் முகம் தெரிந்தவர்களால் நடத்தப்படும் பாலியல் குற்றம் தொடர்பாக, போக்சோ வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணிக்காமல் இருப்பதே இவற்றுக்கு வழிவகுக்கிறது. குழந்தை திருமணம் சார்பாக புகார் இருந்தால், கண்டிப்பாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இக்குற்றங்களை தடுக்க காவல்துறை சார்பில் மிகப்பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்தாண்டில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம்தான் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. அதனால், ஆன்லைன் மூலமே, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறையுடன் இணைந்து செயல்படவுள்ளோம். ஆன்லைன் வகுப்பின்போது 20 நிமிடங்கள் காவல்துறைக்கு ஒதுக்கி கொடுத்தால், குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இதற்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோவை மாவட்டக் காவல் எல்லைகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதைத் தடுப்பது பற்றியும், குழந்தை திருமணம், காவல் செயலி (SOS) பதிவிறக்கம் செய்வது பற்றியும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவையில் 142 குவாரிகள் உள்ளன. இதில் அதிக எடையைக் கொண்டு செல்லும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. திருட்டு சம்பவங்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளை தினசரி வழக்குகளாக பதிவு செய்து வருகிறோம்” என்று கூறினார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 23 ஜூலை 2021