மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஜூலை 2021

சென்னை டு காரைக்கால்: விரைவில் பயணிகள் படகு!

சென்னை டு காரைக்கால்: விரைவில் பயணிகள் படகு!

சென்னையில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் வரை பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகம் திட்டமிட்டு வருகிறது. பயணிகளை, படகுகளை ஈர்க்கும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவைக்கான பணிகள் தொடங்கி உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் சிறு துறைமுகங்கள் அதிகமுள்ளதால் இந்தப் படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேர் பயணம் செய்யும் வகையில் படகு போக்குவரத்து திட்டமிடப்பட்டுள்ளது. கடல் வழி பயணத்தில் இயற்கை அழகையும் கடற்கரையோர நகரங்களை ரம்மியமாக ரசித்தவாறு படகுப் போக்குவரத்து அமையும் என்பதால் சுற்றுலாப்பயணிகளும் இந்த படகு போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது

படகு போக்குவரத்து சேவைக்காக சென்னை - காரைக்கால் இடையே உள்ள சிறு துறைமுகங்களை அழகுபடுத்தும் பணியும் ஆழப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பயணிகளிடம் இருந்து படகு போக்குவரத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்தத் திட்டம் மற்ற கடற்கரை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் மும்பை, கோவா, கொச்சின், குஜராத் ஆகிய துறைமுகங்களில் இருந்து பயணிகள் படகு போக்குவரத்து சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து வாரம்தோறும் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 10 சொகுசு கப்பல்களும் வந்து செல்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டு கப்பல்கள் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் துறைமுகங்கள் மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் படகு போக்குவரத்து தொடங்க இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை துறைமுகம் தலைவர் பி.ரவீந்திரன் தலைமையில் படகு போக்குவரத்தில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் சென்னை துறைமுகத்தில் நடந்தது. இதில் படகு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள ஐந்து நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சென்னை - காரைக்கால் - கொழும்பு மார்க்கத்திலும், சென்னை - கடலூர் - புதுச்சேரி - காரைக்கால் மார்க்கம், புதுச்சேரி - காரைக்கால் இடையேயும் பயணிகள் படகு போக்குவரத்தை தொடங்க தனித்தனியாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சென்னை துறைமுகத்துக்கு கார்களில் வரும் பயணிகள் அவர்களுடைய காரையும் கடலூர், புதுச்சேரி, காரைக்கால் கொண்டு செல்லும் வசதி கொண்ட படகு இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 400 கார்கள் வீதம் கொண்டு செல்லும் படகுகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. படகு இயக்குபவர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.

கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்கள் பயணிகள் படகை நிறுத்துவதற்கு வசதியாக படகு நிறுத்தும் பகுதி ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இந்த பணி நிறைவடைய உள்ளது. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே ஆழப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திலும் புதிதாக கட்டப்பட்ட முனைய கட்டடமும் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

ஓரிரு மாதங்களில் பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

-ராஜ்

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

வியாழன் 22 ஜூலை 2021