மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

தூத்துக்குடி: அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் வருகை ஏன்?

தூத்துக்குடி: அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் வருகை ஏன்?

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வருகை தந்துள்ளது. இக்கப்பலின் வருகை பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது; பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக வங்காள ‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள், குத்தகைக்கு எடுத்துள்ளன. இந்தியாவின் வடக்குப் பகுதியான ‘லடாக்’ பகுதியில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால் அங்கு ஏற்பட்ட பதற்றம் முழுமையாக நீங்கவில்லை. இரு நாட்டுப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை பலமுறை நடந்தபோதிலும் முழுமையான அமைதி ஏற்படவில்லை.

இந்த நிலையில், தென்பகுதியான தமிழகக் கடலோரம் இலங்கைப் பகுதியில், சீனா தன் கப்பற்படையை வலிமைப்படுத்தி வருகிறது. தென் தமிழகத்தில், நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் உள்ள ஐஎன்எஸ் கட்டபொம்மன், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிதாக குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ‘ராக்கெட் ஏவுதளம் என மத்திய அரசின் மிக முக்கிய நிறுவனங்கள் இங்குள்ளன.

இதையொட்டி, இந்தியத் தரப்பிலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை, ராணுவ தளவாடங்களை எளிதாகக் கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

தேவை ஏற்பட்டால் போர் விமானங்கள் இந்த சாலைகளில் இறங்கும் வண்ணம் சாலைகள் அமைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ‘சிந்துஷாஸ்ட்ரா’ தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து முழுமையான தகவல் வெளிவராத நிலையில், கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படைத் தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும், இந்த நீர்மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி கப்பல்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த ‘சிந்துஷாஸ்ட்ரா’ நீர்மூழ்கிக் கப்பல் வந்து இருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் இன்னும் ஒரு வார காலம் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்திய கடற்படை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

-ராஜ்

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 20 ஜூலை 2021