மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

மீன்வள வரைவு மசோதா: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

மீன்வள வரைவு மசோதா: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய அரசின் இந்திய மீன்வள வரைவு மசோதாவைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கறுப்புக்கொடியுடன் கடலில் இறங்கி நேற்று (ஜூலை 19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்திய மீன்வள வரைவு மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவர உள்ளது. இதில் மீனவர்களை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சேசுராஜ் தலைமையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள மசோதாவில், கடலில் எல்லை வரையறுப்பது, எல்லை தாண்டும் மீனவருக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிப்பது, மீன்பிடிக்க செல்லும்போது அனுமதி சீட்டுக்குக் கட்டணம், பிடித்து வரும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற மீனவர்களுக்கு எதிரான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இதை கண்டித்து படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கறுப்புக்கொடியுடன் மீன்பிடி துறைமுக கடற்கரை ஜெட்டிப்பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகளில் கறுப்புக்கொடி கட்டி ஜெட்டி பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. காலை 10 மணியளவில் மீனவர் சங்க பிரதிநிதி என்.ஜே.போஸ் தலைமையில் மீனவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புக்கொடியுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக, தூத்துக்குடி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய மீன்வளம் - கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு, இந்த மசோதாவை பற்றிய கருத்துகளை இமெயில் மூலம் ஏற்கெனவே அனுப்பியிருந்தார்.

அதில், மீனவர்கள் என்பதற்கான விளக்கம் வரையறுக்கப்பட வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் அடிப்படை ஆதாரம் என்பதால், அதிகப்படியான அபராதங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். சில நேர்வுகளில் அவர்கள் மீன்பிடித் தொழிலையே கைவிட நேரிடும். ஆகையால், இந்த அபராதத் தொகை குறைக்கப்பட வேண்டும்.

விதிகளை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத்தான் மீனவர்களின் சிக்கல்கள் குறித்த அறிவும் அனுபவமும் இருக்கும் என்பதால் இந்த அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதனால் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப, மாநில அரசுகள் விதிகளை உருவாக்க முடியும். மத்திய அரசிடம் இவ்வதிகாரம் கொடுக்கப்பட்டால் மாநில அரசுகளால் விதிகளை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப உருவாக்கவோ மாற்றங்கள் செய்யவோ முடியாது.

மேலும், பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமைகளை பாதுகாக்கும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று இந்திய மீன்வள வரைவு மசோதா மீது கனிமொழி தனது கருத்துகளை இ-மெயில் வாயிலாக மத்திய அமைச்சரிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 20 ஜூலை 2021