மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

கலப்பட விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

கலப்பட விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

சான்று பெறாத கலப்பட விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என்று அரசு தரப்பில் எச்சரிக்கை.விடுக்கப்பட்டுள்ளது.

மகசூல் மற்றும் விளைபொருட்களின் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய காரணியாக விதைகள் உள்ளன. எனவே தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விதைச்சான்றுத்துறை மற்றும் விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும் சில பகுதிகளில் தரமற்ற விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு அங்கீகாரமற்ற விற்பனையாளர்களிடமிருந்து விவசாயிகள் விதைகளை வாங்கி சாகுபடி மேற்கொள்வதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தரம் குறைவான, கலப்பட விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாச்சலம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் சம்பா பருவத்துக்கு தேவையான டிகேஎம்-13, பிபிடி-5204, என்எஸ்ஆர்- 34449 போன்ற நெல் விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் விற்பனை நிலையங்களிலும் வர தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் விதைகள் சட்டம் 1966-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் சான்று அட்டை பொருத்தப்படாத தனியார் விதைகளை வாங்க வேண்டாம். விதை உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்களிடமும், அரசு விரிவாக்க நிலையங்களில் மட்டுமே தகுந்த ரசீது பெற்று விதைகளை வாங்க வேண்டும்.

பதிவு எண், முளைப்புத்திறனுக்கான படிவம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கலாதேவி தெரிவித்துள்ளார்.

மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “காரீப் பருவத்தில் ஆடிப்பட்டத்துக்கு ஏற்ற பருவ மழை தற்போது பெய்து வருவதால், கே.ஆர்.பி. அணை, கெலவரப்பள்ளி அணை, பாரூர் ஏரி, சின்னாறு அணை, பாம்பாறு அணை, தும்பல அள்ளி, பஞ்சப்பள்ளி போன்ற நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி வருகின்றனர்.

விவசாயிகள் தங்களது நிலங்களுக்குத் தேவையான விதைகளை வாங்கும் போது அதில் சந்தேகமிருந்தால் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பர்கூர், காவேரிப்பட்டணம், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய வட்டாரங்களிலும், ஓசூர், தளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை அலுவலகங்களில் விதைகளை ஆய்வு செய்யலாம்.

தரமற்ற விதை விற்கும் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தற்சமயம் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினைப் பயன்படுத்தி தரமான சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 18 ஜூலை 2021