மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

பெண்களுக்கான இலவச பயணச் சீட்டில் முறைகேடு: நடத்துநர் சஸ்பெண்ட்!

பெண்களுக்கான இலவச பயணச் சீட்டில் முறைகேடு: நடத்துநர் சஸ்பெண்ட்!

பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை முறைகேடாகக் கொடுத்து கட்டணம் வசூலித்த அரசு பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு நகரப் பேருந்துகளில், பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதுபோன்று அவர் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அமலுக்கு வந்தது.

இதற்கான பயணச் சீட்டுகளில் 'மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு' என்று அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. அரசின் இந்தத் திட்டம் பெண்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமானோர் பேருந்துகளில் பயணிப்பதாகப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"கடந்த 5 நாட்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர். கடந்த ஜூலை 16ஆம் தேதி மட்டும் 29 லட்சம் பெண்கள் பயணம் செய்து இருக்கிறார்கள். இதன்மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சேமிப்பாகிறது" என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தெரிவித்தார்.

இதுபோன்று பெண்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சேலம் ரயில் நிலையத்திலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம், பேருந்தில் பணியிலிருந்த நடத்துநர் நவீன்குமார் பெண்களுக்கான இலவச பயணச் சீட்டை கொடுத்து கட்டணம் வசூலித்துள்ளார்.

அந்த பேருந்து ஐந்து ரோடு அருகே வந்த போது டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களிடம், பெண்களுக்கான இலவச பயணச் சீட்டு இருந்தது, தெரியவந்த நிலையில் அது குறித்து விசாரணை நடத்தினர்.

பேருந்து நடத்துநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆண்களுக்கு இந்த இலவச பயணச்சீட்டைக் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜூலை 18) அவரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

-பிரியா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

ஞாயிறு 18 ஜூலை 2021