மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்த நடத்துனர்: பயத்தில் பயணிகள்!

எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்த நடத்துனர்: பயத்தில் பயணிகள்!

திருப்பூரில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்த நடத்துனருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி , கடைகள் , ஹோட்டல்கள், பேருந்துகள் என அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் பார்சல் கட்டுவதற்கு கவரை பிரிக்கும்போது வாயால் ஊதியும், எச்சில் தொட்டும் பிரிப்பது வழக்கம். தற்போது கொரோனா சமயம் என்பதால், கவரை வாயால் ஊதியோ, எச்சில் தொட்டோ பிரிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது. அதுபோன்று பேருந்தில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும்போது, எச்சில் தொட்டு டிக்கெட்டை கிழித்து கொடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று(ஜூலை 16) காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற பேருந்தில் 57 பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது, நடத்துனர் குணசேகரன் பயணிகளுக்கு டிக்கெட்டை எச்சில் தொட்டு கிழித்து கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், கொரோனா காலம் என்பதால் எச்சில் தொட்டு டிக்கெட்டுகளை கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதையும் மீறி நடத்துனர் மீண்டும் மீண்டும் எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்தில் பயணித்த மாநகராட்சி சுகாதார இரண்டாம் நிலை அலுவலர் முருகேசன் சுண்டமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பேருந்து திருப்பூர் வந்தடைவதற்கு முன்பாகவே, கொரோனா பரிசோதனை செய்யும் பணியாளர்களுடன் சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் இருந்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பேருந்து வந்ததும், நடத்துனருக்கு அங்கேயே வைத்து கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு நாட்களில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது தெரிய வரும் என்றாலும், அந்த பேருந்தில் பயணித்த அனைவரும் கலக்கத்துடன் வீடு திரும்பினர்.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 16 ஜூலை 2021