மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

ஒருவரை மீட்கச் சென்று 30 பேர் கிணற்றில் விழுந்த சோகம்!

ஒருவரை மீட்கச் சென்று 30 பேர் கிணற்றில் விழுந்த சோகம்!

மத்தியப் பிரதேசத்தில் சிறுவனை மீட்கச் சென்று 30க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், சந்தீப் பரிஹார் அப்பகுதியிலிருந்த கிணற்றில் நேற்று இரவு தவறி விழுந்துவிட்டார். அவரை காப்பாற்றவும், வேடிக்கை பார்க்கவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிணற்றின் அருகே கூடினர்.

அதிகமானோர் கூடியதால் அதிக பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச் சுவர் உடைந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதன் காரணமாகச் சுற்றுச்சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர்.

ஒருவரை மீட்கச் சென்று, பலர் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்து தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன், காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேரம் என்பதாலும், கிணற்றினுள் உடைந்து விழுந்த சுற்றுச் சுவர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவின் பேரில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாறங் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகிறார்.

அவர் கூறுகையில், குறைந்தது 30 பேராவது கிணற்றினுள் விழுந்திருக்கலாம். இதுவரை 19 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இது 50 அடி ஆழம் கொண்ட கிணறு 20 அடி தண்ணீர் இருந்தது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். அதுபோன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீடும், இலவச சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து, காலை முதல் மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இச்சம்பவம், திருச்சி நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த குழந்தை சுஜித்தை நினைவுபடுத்துகிறது. 2019 அக்டோபர் 25ஆம் தேதி அன்று, விளையாடிக் கொண்டிருக்கும் போது, தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான் சுஜித். ராட்சத இயந்திரங்கள், தேரிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள், காவல்துறையினர் என 4 நாட்களாகப் போராடினர். சுஜித்தை மீட்க வேண்டும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை.

அதுபோன்று மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்தவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என அம்மாநில மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

-பிரியா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 16 ஜூலை 2021