மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும்: நளினி முருகன் மனு!

நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும்: நளினி முருகன் மனு!

எனக்கும் கணவர் முருகனுக்கும் நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் உள்துறை செயலாளருக்கு நளினி மனு அனுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன் - மனைவி இருவரும் 29 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நளினி வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும்படி மனு வழங்கி உள்ளார்.

அந்த மனுவில், “நானும், எனது கணவர் முருகனும் கடந்த 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறோம். தற்போது எனது தாய் வயதான காலத்தில் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளார். எனது கணவரின் தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு உயிரிழந்து விட்டார். மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சாதாரண விடுப்பு, அவசர விடுப்பு எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. நாங்கள் 30 ஆண்டுகள் ஜெயிலில் இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் முன்விடுதலை செய்ய அரசியல் அமைப்பு சட்டம் 161-ன் கீழ் முடிவு செய்து தமிழக கவர்னருக்கு அனுப்பியது. அமைச்சரவை முடிவு எடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிவு தெரியவில்லை. முடிவு தெரியும்வரை எங்களுக்கு நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும்.

பிரிவு-40 தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தை பயன்படுத்தி நீண்டகால விடுப்பு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில் ஜெயிலில் நாங்கள் படும்துயரத்தை கருத்தில்கொண்டு நீண்ட கால விடுப்பில் என்னையும், கணவர் முருகனையும் விடுவிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இதற்கிடையே நேற்று மாலை நளினி, முருகனை அவர்களின் வக்கீல் புகழேந்தி தனித்தனியாகச் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம், “நளினி, முருகனுக்கு நீண்ட கால விடுப்பு வழங்கும்படி நளினியின் தாயார் பத்மா இந்த வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

புதன் 14 ஜூலை 2021