மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் இடைநிற்றல் விகிதம்!

தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் இடைநிற்றல் விகிதம்!

தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த பட்டியலில் தெரியவந்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ) நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளின் தரவுகளை ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் 15 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 26 கோடியே 50 லட்சம் மாணவர்களும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க 97 லட்சம் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

இந்த 15 லட்சம் பள்ளிகளின் 2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான அனைத்து தரவுகளையும் ஆய்வுசெய்து அதை தற்போது பட்டியலாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், இதர பள்ளிகள் என மொத்தம் 58,897 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 45 லட்சத்து 93,422 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு கோடியே 33 லட்சத்து 17,883 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த மாணவ மாணவிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் இடைநிற்றல் விகிதத்தைப் பார்க்கும்போது, முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் 1.1 சதவிகிதமும், 6 முதல் 8ஆம் வகுப்புகளில் 0.4 சதவிகிதமும், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 9.6 சதவிகிதமும் இருக்கிறது. இதன்மூலம் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில்தான் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவது தெரியவருகிறது. இதில் 13 சதவிகித மாணவர்களும், 6 சதவிகித மாணவிகளும் அடங்குவார்கள்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. நோய் தொற்றுக்காலத்தில் பல மாணவ மாணவிகளின் பெற்றோருடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்களில் பெரும்பாலான மாணவ மாணவிகள் அவர்களால் முடிந்த வேலைக்கு செல்ல தொடங்கி இருப்பதாகவும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது அவர்கள் பள்ளிக்கு வருவார்களா என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும், இதன் காரணமாக இடைநிற்றல் விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதேபோல் பள்ளிகளில் மாணவ மாணவிகள் தக்கவைத்தல் விகிதத்தை (ரெட்டன்சென் ரேசியோ) பார்க்கும்போது, தொடக்கப் பள்ளிகளில் (ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 94 பேர்தான் 5ஆம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள். நடுநிலைப் பள்ளிகளில் (ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 86 பேர்தான் 8ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.

அதேபோல், உயர்நிலைப் பள்ளிகளில் (ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர்தான் 10ஆம் வகுப்பை முடிக்கிறார்கள். மேல்நிலைப் பள்ளிகளில் (ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 பேரில் 68 பேர் மட்டும்தான் 12ஆம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள்.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட இந்தத் தகவல்கள் தமிழகப் பள்ளி கல்வித்துறைக்கு ஒரு அதிர்ச்சி தகவல்.

ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 13 ஜூலை 2021