கொரோனா இன்னும் குறையவில்லை: உலக சுகாதார அமைப்பு!

public

உலக அளவில் கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளாகியும், இன்னும் அதன் வீரியம் குறையாமல் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது குறைந்து வந்தாலும், டெல்டா பிளஸ் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா அதிகளவில் பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பியா நாடுகளில் டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதை பார்க்க முடிகிறது.

அதேசமயம், இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நாடுகளில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மீண்டும் திறக்கப்பட்டுள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. இது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என இந்திய ஒன்றிய அரசு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் அளித்துள்ள பேட்டியில், “உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. கொரோனா தொற்று குறையவில்லை என்பதற்கான சான்றுதான் இது. சில நாடுகள் தடுப்பூசி மூலம் நோயின் தீவிர தன்மையைக் குறைத்து வருகின்றன.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 5,00,000க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளும், 9,300 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஆறில், ஐந்து மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்காவில் இறப்பு விகிதம் இரண்டு வாரங்களில் 30% – 40% ஆக உயர்ந்துள்ளது.

மெதுவாக தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் முகக்கவசம் அணிதலை கைவிடுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததுதான் பாதிப்பு அதிகரிப்பிற்கு முக்கிய காரணம்.

தற்போதைய சூழலில் சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மட்டும்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரகால திட்ட தலைவர் மைக் ரயான், “உலகின் எந்த ஒரு பகுதியிலும், இப்போதைக்கு இயல்புநிலைக்குத் திரும்புவது என்பது மிகவும் ஆபத்தான விஷயம்” என்று கூறினார்.

உலக நாடுகள் ஊரடங்கில், தளர்வுகள் என்ற பெயரில் மீண்டும் ஆபத்தை வரவழைத்து விடக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வாரமே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *