மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

பூண்டியில் நீர்வரத்து உயர்வு: சென்னைக்குக் கூடுதல் குடிநீர்!

பூண்டியில் நீர்வரத்து உயர்வு: சென்னைக்குக் கூடுதல் குடிநீர்!

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிக்கப்பட்ட நிலையில், விநாடிக்கு 581 கன அடியாக தண்ணீர் வருகிறது. இதனால் சென்னைக்குக் கூடுதல் குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. முதலில் விநாடிக்கு 150 கன அடியாக வந்த நீர், படிப்படியாக அதிகரித்து நேற்று (ஜூலை 10) காலை ஆறு மணி நிலவரப்படி விநாடிக்கு 581 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 23.57 அடியாக பதிவாகியது. 652 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக விநாடிக்கு 155 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 9 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடந்த 16ஆம் தேதி ஏரியில் வெறும் 166 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 907 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஓரளவு தண்ணீர் ஏரிகளுக்கு வருகிறது.

தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளிலும் 6, 912 மில்லியன் லிட்டர் (6.9.டிஎம்சி) இருப்பு உள்ளது. எனவே கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், குடிநீருக்காகப் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதற்காக கூடுதல் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தற்போது சென்னை மாநகர பகுதிகளுக்கு 85 கோடி லிட்டர் (850 மில்லியன் லிட்டர்) குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை 900 மில்லியன் லிட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து முறையான அறிவிப்பை அரசு விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 11 ஜூலை 2021