மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

ரூ.4,108 கோடி அபராதம்: ‘எவர்கிவன்’ கப்பலை விடுவித்த சூயஸ் நிர்வாகம்!

ரூ.4,108 கோடி அபராதம்: ‘எவர்கிவன்’ கப்பலை விடுவித்த சூயஸ் நிர்வாகம்!

சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக பிணையாக வைக்கப்பட்ட ‘எவர்கிவன்’ கப்பல் 4,108 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்தி மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், சீனாவிலிருந்து சுமார் 20,000 சரக்கு கன்டெய்னர்களுடன் நெதர்லாந்தின் ராட்டர்டாமை (Rotterdam) நோக்கி, சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றுகொண்டிருந்தது எவர்கிவன் கப்பல். அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயின் பாதையை அடைத்தபடி இரு சுவர்களிலும் மோதி நின்றது. இதனால் சூயஸ் கால்வாய், பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி முற்றிலுமாக அடைபட்டு, ஒரு வாரத்துக்கும் மேலாக வர்த்தகப் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் கப்பலை மீட்பதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு, சுமார் ஒரு வாரம் நடந்த தொடர் போராட்டத்தின் விளைவாக எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டது.

கப்பல் முழுமையாக மீட்கப்பட்டாலும், அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பீட்டால் எகிப்து அரசாங்கம் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தது. உலகின் மிக முக்கியக் கடல் வர்த்தகப் பாதையாக கருதப்படும் சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் கப்பலால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ70,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து, அந்தப் பகுதியின் கடல் வர்த்தகம் முழுமையுமே அப்போது பாதிப்புக்குள்ளானது.

இதனால், சூயஸ் கால்வாயில் சிக்கி வர்த்தகப் பிரச்சினையை உண்டாக்கிய எவா்கிவன் கப்பலை, பாதிப்புக்குள்ளான எகிப்து அரசாங்கம் முடக்கியது. சூயஸ் கால்வாயின் மையப்பகுதியிலிருக்கும் ‘கிரேட் பிட்டர்’ ஏரியில் சிறைபிடித்து வைத்தது. கப்பல் ஏற்படுத்திய இழப்பை சரிக்கட்ட, தைவானைச் சேர்ந்த அந்தக் கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷாவிடம் (Shoei Kisen Kaisha) ஒரு பெரும் தொகையை நஷ்டஈடாகக் கேட்டது சூயஸ் நிர்வாகம்.

“916 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் 6,600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கினால்தான் கப்பலை விடுவிப்போம். இல்லையெனில் கப்பல் இங்கிருந்து ஓர் அங்குலம் கூட நகராது. இந்த இழப்பீட்டுத் தொகை வந்து சேரும்வரை, எவர்கிவன் கப்பல் எகிப்திலிருந்து கிளம்பாது” என அதிரடியாக அறிவித்தது சூயஸ் நிர்வாகமும், எகிப்து அரசாங்கமும்.

ஆனால், எவர்கிவன் கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா எவ்வளவோ கேட்டும், அவரின் கோரிக்கைகளை நிராகரித்தது. பணத்தை வைத்தால்தான் கப்பல், வேறு பேச்சுக்கே இடமில்லை என கறாராக தெரிவித்தது. இதனால் அதிருப்திக்குள்ளான எவர்கிவன் கப்பல் நிர்வாகம், ‘சூயஸ் கால்வாய் நிர்வாகம் மிக அதிகப்படியான தொகையைக் கேட்கிறது’ என குற்றம்சாட்டியது.

அதைத் தொடர்ந்து, இரண்டு நிர்வாகத்தினருக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் இழப்பீட்டுத் தொகையை 550 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் 4,108 கோடி ரூபாய் என சூயஸ் கால்வாய் நிர்வாகம் குறைத்துக் கொண்டது.

இந்த நிலையில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் கேட்ட பணத்தை வழங்குவதற்கு எவர்கிவன் கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒருவழியாக ஒப்புக்கொண்டார். மேலும், அது தொடர்பான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து, சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக பிணையாக வைக்கப்பட்ட ‘எவர்கிவன்’ கப்பலை, சூயஸ் கால்வாய் நிர்வாகம் நேற்றைய தினம் விடுவித்தது. இதையடுத்து அந்தக் கப்பல் நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த கப்பல் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 9 ஜூலை 2021