மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

மீண்டும் முழு ஊரடங்கு: எச்சரிக்கும் ஒன்றிய அரசு!

மீண்டும் முழு ஊரடங்கு: எச்சரிக்கும் ஒன்றிய அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை லட்சக்கணக்கில் பாதிப்பையும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி இந்தியாவையே புரட்டிபோட்டது. தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் சுற்றுலா தலம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன மாநில அரசுகள். இருப்பினும், கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை, அதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று (ஜூலை 6) செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய சுகாதார துறை இணை செயலாளர் லவ் அகர்வால், “மலைப்பிரதேசம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை. சிம்லா, மணாலி, முசோரி போன்ற மலைப் பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருப்பதைப் பார்க்க பயமாக இருக்கிறது. இது கூடுதல் கொரோனா பாதிப்புக்கு வழிவகுக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகள் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். இதுவரை கிடைத்த பலனெல்லாம் தற்போதைய விதிமீறல்களால் அழிந்துவிடும்.

கொரோனா இரண்டாவது அலை பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து வந்தாலும், சில மாநிலங்களில் அதிகமாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு 10 சதவிகிதம் வரையுள்ள மாநிலங்கள் கட்டாயம் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும். 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 73 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிகிதமாக உள்ளது. 91 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கு மேல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஐசிஎம்ஆரின் தலைமை இயக்குநர் பால்ராம் பார்கவா பேசுகையில், “கொரோனா விதிமுறைகளைப் பொதுமக்கள் கைவிடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள் வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றுவதில்லை என்பது ஆன்லைன் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டில் 24% பேர் முகக்கவசம் அணிவதில்லை. 45% பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை. 63% பேர் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. 25% பேர் பயணங்களின்போது கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றுவது இல்லை என்பது ஆய்வில் தெரிகிறது. வடகிழக்கு மாநிலங்கள் கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை அதிகமாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இரண்டு மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த சுற்றுலா தலங்களுக்கு ஜூலை 5ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் இன்று முதல் மீண்டும் சுற்றுலா தலங்கள் மீண்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

புதன் 7 ஜூலை 2021