மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

கொரோனா முடிவுக்கு வரவில்லை : ஒன்றிய அரசு எச்சரிக்கை!

கொரோனா முடிவுக்கு வரவில்லை : ஒன்றிய அரசு எச்சரிக்கை!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் நேற்றைய(ஜூலை 2) செய்தியாளர்கள் சந்திப்பில், ”கொரோனா தொற்று குறையாத கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு பேர் கொண்ட குழுவில் ஒரு மருத்துவர் மற்றும் பொது சுகாதார நிபுணர் உள்ளனர். இவர்கள் தொற்று நோய் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்” என்று கூறினார்.

மேலும், ”மூன்றாவது அலை ஏற்படுவது எங்கள் கையில் இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடு, ஐசியூ படுக்கைகள் போன்றவற்றை தயாராக வைத்து கொள்ள வேண்டும். மக்கள் பொறுப்புடன் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினாலே கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியும்.

நாட்டிற்கு, ஆகஸ்ட்-டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். 12 மாநிலங்களில் 56 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக பேசிய ஒன்றிய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால், “இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.தொற்று உள்ள இடங்களை மட்டும் கண்டறிந்து சிறு கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து கண்காணிக்க வேண்டும்.

கடந்த வாரத்தைவிட கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 13 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 46,000 என்ற அளவில் உள்ளது. 71 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் அல்லது 60 சதவீத படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்களில் 14 நாள்கள் கடும் கட்டுப்பாடுகள் விதித்து பரவலை தடுக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி போடுவது என்பது மாரத்தான் ஓட்டம். தடுப்பூசி தயாரிப்பை மேலும் எப்படி அதிகரிப்பது என்று நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. உலகளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 3 ஜூலை 2021