மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை: உயர் நீதிமன்றம்!

அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை: உயர் நீதிமன்றம்!

சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த முத்துகண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “ கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு கொரோனா சிகிச்சை மையங்களில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாக இருக்கிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு நேற்று(ஜூலை 2) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ வசதிகள் இருந்த போதும், கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அபாயகரமானதாக உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையை தடுக்க தனியார், அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் மோசமான நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது. உரிய மருத்துவக் காப்பீடு இல்லாததால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியவில்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

”தமிழ்நாட்டில் உயர் மருத்துவ வசதிகள் இருந்தாலும், கொரோனா போன்ற பேரிடர்களை கையாள சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். மாநிலத்தில் அனைத்து பிரிவினருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறந்த மருத்துவ வசதிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் இதே பிரச்சனை இருந்தாலும், மருத்துவம் மாநில பட்டியலில் உள்ளதால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்தான் திட்டங்களை வகுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

சனி 3 ஜூலை 2021