மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

மத்திய அரசின் ரூ.15 லட்சம் பரிசு பெறும் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனை!

மத்திய அரசின் ரூ.15 லட்சம் பரிசு பெறும் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனை!

மத்திய அரசின் ‘காயகல்ப்’ விருதுக்கு, தமிழ்நாடு அளவில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு 15 லட்சம் ரூபாயைப் பரிசாகப் பெறுகிறது

இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற தூய்மை மற்றும் வெளிப்படை தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனையைக் கண்டறிந்து ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசின் சார்பாக ‘காயகல்ப்’ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அனைத்து மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். அந்தக் குழுக்கள் அங்குள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் சென்று கள ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு மதிப்பெண் அடிப்படையில் அறிக்கை சமர்பிக்கும். அதன் அடிப்படையில் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம்பிடித்த மருத்துவமனைகளுக்கு ‘காயகல்ப்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த இடங்களை பிடிக்கும் மருத்துவமனைகளுக்கு ஆறுதல் ரொக்க பரிசுகளும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2020-2021) மத்திய அரசின் விருதான காயகல்ப் விருது தமிழ்நாடு அளவில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளது. மேலும் முதல் பரிசாக ரூ.15 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை அரசு மருத்துவமனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட போதில் இருந்தே செயல்பட்டு வருகிறது. பிரசவம், தொற்று நோய் பிரிவு, தோல் மருத்துவம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் அந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

60 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தற்போது சுமார் 2,000 பேர் வரை புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். அங்கு கொரோனா சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது.

காயகல்ப் விருது பெற்றுள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனை ஏற்கனவே கடந்த 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளும் தொடர்ந்து ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளது. காயகல்ப் விருதுக்காக மத்திய அரசின் குழு பரிந்துரையின்படி இதுவரை நான்கு குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு இருந்தது.

அதன் முடிவில் இதுவரை எந்த மாநிலமும் பெற்றிராத வகையில் இந்த ஆண்டு 99.3 சதவிகிதம் மதிப்பெண்ணை அந்தக் குழு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது.

விருது குறித்து பேசியுள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா, “செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சுத்தம் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவப் பிரிவு டாக்டர்கள், பணியாளர்கள் அர்ப்பணிப்பால் தான் இந்த விருது கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 2 ஜூலை 2021