மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

போலி இறப்பு ஆவணம் மூலம் குழந்தை விற்பனை : 5 பேர் கைது!

போலி இறப்பு ஆவணம் மூலம் குழந்தை விற்பனை : 5 பேர் கைது!

மதுரையில் கொரோனாவால் குழந்தை உயிரிழந்ததாக நாடகமாடி குழந்தை விற்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் சிவக்குமார் என்பவர் இதயம் அறக்கட்டளை என்ற ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறார். இங்கு, மதுரை அருகேயுள்ள சேக்கிப்பட்டியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் பாதித்த இளம்பெண், தனது 3 குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களாக தங்கி வந்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் ஒரு வயது மகன் மாணிக்கத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த 13ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பால் மாணிக்கம் உயிரிழந்து விட்டதாகவும், தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி அதற்கான ஆவணங்கள், புதைக்கப்பட்ட படத்தையும் ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்துவிட்ட சமூக ஆர்வலர் அசாருதீனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களில் சந்தேகம் இருந்தால் அசாருதீன் தல்லாக்குளம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை புதைத்தது போன்று போலியான ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக இருந்து வரும் காப்பகத்தின் தலைவர் சிவக்குமாரை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர் போலீசார்.

இதில் கைது செய்யப்பட்ட காப்பகத்தின் முக்கிய நிர்வாகியான கலைவாணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி, ரூ.5 லட்சத்துக்கு ஆண் குழந்தையை வாங்கிய மதுரை இஸ்மாயில்புரம் பகுதியில் உள்ள நகைக் கடை உரிமையாளரான கண்ணன் மற்றும் அவரது மனைவி பவானியை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று பெண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு வாங்கிய மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தை விற்பனை சம்பவத்தில் இதுவரை மொத்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விற்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். இதயம் அறக்கட்டளையில் தங்கியிருந்த 82 சிறுவர்கள் முதல் அனைவரையும் மீட்ட போலீசார், அவர்களை வேறு காப்பகங்களுக்கு மாற்றியுள்ளனர். இதையடுத்து, இதயம் அறக்கட்டளை காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.

காப்பகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கணினியின் ஹார்டு டிஸ்க் சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவக்குமாரின் தனிப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அறக்கட்டளையின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் வெளியிட்ட அறிக்கையில், ”துரித நடவடிக்கைகள் மூலமாக குழந்தைகள் மீட்கப்பட்டன. காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரையில், மத்திய அரசின் 2 முதியோர் காப்பகங்கள், மாநில அரசின் ஒரு முதியோர் காப்பகம் மற்றும் 12 தனியார் காப்பகங்கள் என மொத்தம் 15 காப்பகங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை மூலம் உரிமம் புதுப்பிக்கபடாமல் உள்ள காப்பகங்களை கண்டறிந்து நேரில் ஆய்வு நடத்தப்படும். குழந்தை விற்பனை சம்பவத்தில் போலி ஆவணம் தயாரித்ததில் அரசு ஊழியர்கள் யாரேனும் உடந்தையாக இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 1 ஜூலை 2021