மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டில் வைக்க அனுமதி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டில் வைக்க அனுமதி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் ஒரு மணிநேரம் வைக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்து சென்று இறுதிச் சடங்குகளை செய்ய அனுமதி கிடையாது. இதன்மூலம் நோய் பரவும் என்பதால், இதற்கு தடை விதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து நேரடியாக தகனம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கேரள அரசு உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் ஒரு மணிநேரம் வைக்க அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து நேற்று(ஜூன் 29) செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “கடந்த 24 மணி நேரத்தில் 13,550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 13,093 ஆக உயர்ந்துள்ளது.

10,283 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 27,97,779 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 11% ஆக உள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் ஒரு பகுதியாகப் பரவி வருகிறது. இந்த நோய் முதல் அலையைவிட வேகமாகப் பரவினாலும், சுகாதார அமைப்புகள் சிறப்பாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்த முடிந்தது.

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை. இது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டுக்குக் கொண்டு சென்று ஒரு மணி நேரம் வரை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் வரையறுக்கப்பட்ட இறுதிச் சடங்குகளை மக்கள் கூட்டம் இல்லாமல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் இத்தகைய அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 30 ஜுன் 2021