மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

கல்விக் கட்டண பாக்கி: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

கல்விக் கட்டண பாக்கி: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

கல்விக் கட்டண பாக்கியைச் செலுத்துமாறு பெற்றோர்களைத் தனியார் பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், "கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது, கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும், தனியார் பள்ளிகள் தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபடுகின்றன. அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடப்பு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்ள, கடந்த ஆண்டு கட்டண பாக்கியைச் செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

மாணவர்களை அடுத்த வகுப்புக்கு முன்னேற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையான உபகரணங்களையும், இணையதள வசதியையும் கொரோனா நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மாதந்தோறும் நடத்த உத்தரவிட வேண்டும். கட்டண பாக்கியைத் தள்ளுபடி செய்து, ஆன்லைன் வகுப்புகளை திறமையான முறையில் நடத்த மாற்று நடைமுறைகளைக் கண்டறிய கல்வித்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதுடன், குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நேற்று (ஜூன் 29) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு,இந்த மனுவுக்கு அடுத்த வாரத்துக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

தனியார் பள்ளிகளில் 75 சதவிகிதக் கட்டணம் தான் வசூலிக்க வேண்டும், அதுவும் இரண்டு தவணையாகப் பிரித்து வசூலிக்க வேண்டும்.100 சதவிகித கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 30 ஜுன் 2021