மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

சென்சார் கருவி பழுது: பாம்பன் ரயில் போக்குவரத்து நிறுத்தம்!

சென்சார் கருவி பழுது: பாம்பன் ரயில் போக்குவரத்து நிறுத்தம்!

கொரோனா ஊரடங்கு தளர்வில் தற்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாம்பன் தூக்குப்பாலத்தில் சென்சார் கருவியில் மீண்டும் பழுது ஏற்பட்டு இருப்பதால், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மண்டபம் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் அதிக சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிர்வுகள் உள்ளதா என்பதை கண்டறிய கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐஐடி மூலம் தூக்குப்பாலத்தில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்துக்கு நேற்று முன்தினம் (ஜூன் 28) அதிகாலை வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில், பாம்பன் கடலில் தூக்குப்பாலத்தைக் கடந்தபோது, தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவிகள் ஒலி எழுப்பியதாகவும், மேலும் லேசான அதிர்வுகள் இருப்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் ரயில் பாலத்தில் தற்போது தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் மற்றும் திருச்சி பயணிகள் ரயிலும் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டன.

பின்னர் பாம்பன் தூக்குப்பாலத்தில் சத்தம் வந்த பகுதியை ரயில்வே பொறியாளர்கள், அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சென்சார் கருவியில் பழுது ஏற்பட்டுள்ளதால் இந்த சத்தம் வந்துள்ளதும், லேசான அதிர்வு இருப்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மூலம் சென்னை ஐஐடிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஐஐடி குழுவினர் நேற்று (ஜூன் 29) பாம்பன் தூக்குப்பாலத்தை நேரில் ஆய்வு செய்து பழுதான சென்சாரை அகற்றி மீண்டும் புதிய சென்சார் பொருத்தி சோதனை செய்தனர். இந்த நிலையில் இன்று (ஜூன் 30) அல்லது நாளை முதல் மீண்டும் பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து ராமேஸ்வரத்துக்கு நடைபெறலாம் என்றும், அதுவரை மண்டபம் நிலையம் வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வில் தற்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் அதிக சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தூக்குப்பாலத்தில் இதேபோன்று சென்சார் கருவி பழுதாகி இரண்டு நாட்கள் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

புதன் 30 ஜுன் 2021