மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

ஐஸ்க்ரீம் விற்ற ஊருக்கே போலீஸ் அதிகாரியாக வந்த பெண்!

ஐஸ்க்ரீம் விற்ற ஊருக்கே போலீஸ் அதிகாரியாக வந்த பெண்!

காதல் கணவனால் கைவிடப்பட்டு இல்லற வாழ்க்கையைத் துறந்து ஐஸ்க்ரீம் விற்ற ஊருக்கே போலீஸ் அதிகாரியாக வந்த பெண்ணின் உழைப்பும் வைராக்கியமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் 31 வயது ஆனி சிவா. தனது கல்லூரி முதலாம் ஆண்டு படிப்பின்போது பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இரண்டு வருடங்கள் காதல் கணவருடன் இல்லற வாழ்க்கை நடத்தினார் ஆனி. அடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எட்டு மாதக் கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட ஆனியைப் பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் ஆனி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். கடைசியாக தனது பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

ஆனாலும் வைராக்கியத்துடன் இருந்த ஆனி, மனத்திடத்துடன் உணவு டெலிவரி செய்வது, எலுமிச்சைப்பழம் விற்பது, திருவிழாக்களில் ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது எனக் கிடைத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டு கல்வியையும் விடாமல் தொடர்ந்து வந்துள்ளார்.

தற்போது போலீஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஸ்க்ரீம் விற்பனை செய்த ஊரிலேயே போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வர்கலா சிவகிரி யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சை மற்றும் ஐஸ்க்ரீம் விற்றேன். இன்று நான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அதே இடத்துக்குத் திரும்பியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

கேரளக் காவல்துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் கணக்கு அவரது கதையை ஒரு குறிப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளது... “இது ஒரு போராட்டத்தின் கதை. சவால்களுக்கு உறுதியுடன் நின்ற எங்கள் சகாவின் வாழ்க்கை கதை” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனியின் கதை கேரளா முழுவதும் அவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்று தந்துள்ளது. நடிகர் உன்னி முகுந்தன் பாராட்டி, “பெண்கள் அதிகாரம் என்பது நிஜமாகிறது, பெரிய கனவுகள் மூலமாக. உண்மையான போராளி. அனைவருக்கும் உத்வேகமாக இருப்பார்” என்று தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது ஃபேஸ்புக்கில், “அவரது கணவரும் பெற்றோரும் அவளை வீதியில் கைவிட்டபோதும், அவர் வாழ்க்கையின் சவால்களுக்கு எதிராக போராடி பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார், அதே நேரத்தில் ஒரு குழந்தையை வளர்த்து வந்துள்ளார். ஆனி உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறார்” எனக் கூறி உள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது பதிவில், “எஸ்.பி. ஆனியின் வாழ்க்கை கதை மிகவும் உற்சாகமூட்டுகிறது. அவர் வாழ்க்கையின் வெற்றி மற்றும் மன வலிமையின் எடுத்துக்காட்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் பலரும் ஆனிக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-ராஜ்

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

செவ்வாய் 29 ஜுன் 2021